Brahmin In Meditation

இந்நிகழ்வுகளின் அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது.

பகுதி 1

பலவித இன்னல்களுக்கிடையே திரு. சுப்பாராவின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போதிலும், அவர் தன் மனதில் ரகசியமான ஒரு ஆசையைதன் மனைவி வேங்கடலக்ஷ்மிக்குக் கூடத் தெரியாமல் அடை காத்து வைத்திருந்தார். ஒருசின்னஞ்சிறிய பூச்செடி எப்படி தோட்டத்தில் மெல்ல மெல்ல அழகாக வளருமோ, அதைப் போல அந்த ஆசை அவர் மனதில் வளர்ந்து கொண்டிருந்தது.
தன் பொருளாதார நிலைமை சிறிது முன்னேற்றமடைந்ததும் சுப்பாராவ் அவ்வாசையைத் செயலாக்க முடிவு செய்தார், அதிலும், உலகிலுள்ள உத்வேகம் அனைத்தையும் ஒன்று சேர்த்தாற்போல ஒரு உத்வேகம் கொண்டு.
ஆனால், அவர் மனதில் ஒளித்து வைத்திருந்த ஆசை தான் என்ன? அதுவும் தன் மனைவிக்குக் கூடத் தெரியாத அப்படி ஒரு ரகசியம்?
சிறு வயது முதலே சுப்பாராவை தவ வாழ்க்கை வாழ்ந்த தன் முன்னோர்கள் பற்றிய செய்திகள் வெகுவாக பாதித்திருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் தம் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் துறவிகள் போன்று தவம் செய்வதிலேயே தம் பெரும்பாலான நேரத்தை செலவிட்டவர்கள்.
தன் முன்னோர்களைப் போலவே போல திரு. சுப்பாராவும் உலகாயதத்தை விட்டு விலகி எஞ்சியுள்ள தன் வாழ்நாள் முழுவதையும் மெளனம் நிறைந்த தியானத்தில் நிலைத்திருக்க உறுதி பூண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுப்பது, பின் அதையே பின்பற்றி துறவு நிலைக்கும் பின் பேரின்பப் பெருநிலையாம் மோக்ஷத்திற்கும் செல்வது…இதுவே அவர்தம் அவா.
அவர் நன்கறிந்திருந்தார். இப்படியான ஒரு நிலையை ஆன்மிகத்தில் அடைவதற்கு ஒரு உண்மையான பிராமணன் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைக் குறித்து அதன் மூல மந்திரத்தை இடைவிடாது ஜெபிக்க வேண்டும், நாட்கணக்கில், மாதக்கணக்கில்…வருடக்கணக்கில்! அதெல்லாம் சரி…ஆனால் சுப்பாராவிற்கு ஒன்று புரியவில்லை. எந்த தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடனம் செய்தால் அது தன் மனதில் கனன்று கொண்டிருக்கும் ஆன்மிகப் பசியைத் தணித்து, தான் ஏங்கிக் கொண்டிருக்கும் பேரின்பப் பெருவாழ்வைத் தரும்? யார் அந்த தெய்வம்?

யார்…யார்…யார்…?!!

இந்தக் குறிப்பிட்ட கேள்வி – உலகில் யாராலுமே குறிப்பிட்டுப் பதிலுரைக்க முடியாத கேள்வி – சுப்பாராவைத் தவிப்பில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் ஒரு நாளின் சில மணி நேரங்கள் சுடர் போலத் தோன்றிய இந்த எண்ணம், பின் ஒரு வாரத்தின் பல நாட்களுக்குக்குக் கனன்று, ஒரு மாதத்தின் பல நாட்களுக்குக் கொழுந்து விட்டெரிந்து, பின் அதுவே முதிர்ந்து போய் ஒரு வருடத்தின் பல மாதங்களுக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது.
ஒரு சிறிய கேள்வி –யார்?– என்பது சுப்பாராவின் மனதை நெறித்து பகற்பொழுதை பயங்கரமானதாகவும் ராப்பொழுதை தூக்கமின்றித் தவிக்கும் ஒரு அவஸ்தையாகவும் மாற்றி விட்டிருந்தது. தன் மனதிலிருக்கும் இந்த நெருப்பைப் பற்றியோ, அவரின் ஆசையைப் பற்றியோ யாரிடத்திலும் சொல்லாமலும், காண்பித்துக் கொள்ளாமலும் திரு. சுப்பாராவ் ஏறக்குறைய ஒரு முழு ஆண்டுகாலம் கற்பனைக்கெட்டாத சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
இப்படி ஒரு அவஸ்தையை அனுபவித்து வரும் காலத்தில் தன் கேள்விக்குப் பதிலை எதிர்பார்த்து சுப்பாராவ் பல ஆன்மிகப் பெருந்தகைகளைச் சந்தித்து தனக்குச் சரியான பாதையைக் காட்டுமாறு வேண்டினார். துரதிர்ஷ்டவசமாக அவர்களில்  யாருக்குமே சுப்பாராவின் மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்கும் வழி தெரிந்திருக்கவில்லை.
காலம் தன் இரக்கமில்லாத மிகப் பெரிய சக்கரத்தைச் சுழற்றியபடி இருந்தது…
சுப்பாராவ் அவர்களை வாட்டிக் கொண்டிருந்த வேதனைக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. அவருடைய தவிப்பு நாளாக ஆக இரட்டிப்பாகிக் கொண்டிருந்தது.
“யாரை எண்ணி நான் தவம் புரிவேன்? எந்த தெய்வத்தின் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து இந்த மனித வாழ்வின் ஆசைகளிலிருந்தும் தீரா இன்னல்களிலிருந்தும் விடுபடுவேன்? எனக்கு முக்தியளிக்கக் கூடிய அந்த ஒரு மந்திரம் தான் என்ன?”
“எந்த தெய்வம்? யாரைக் குறித்து தியானம்? என்ன மந்திரம்?…எந்த தெய்வம், எந்த தியானம்? எந்த தெய்வம், எந்த தியானம்? தெய்வம், தியானம்….தியானம், தெய்வம்….தெய்வம், தியானம்…தியானம், தெய்வமேஏஏ!!!”
இத்தவிப்பு ஒரு மன அழுத்தமாகவே மாறி சுப்பாராவின் ஒவ்வொரு நாடி நரம்புகளையும் அழுத்தத் தொடங்கியது. அவர் மிகவும் துடித்தார், நிம்மதியிழந்தார், மிகுந்த சங்கடத்திற்கும் சஞ்சலத்திற்கும் உள்ளானார்…இயல்பாக மூச்சு கூட விட முடியவில்லை அவரால்…
1980 ஆம் ஆண்டின் ஒரு சாயங்காலம் 4.30 மணி வரை இந்த தவிப்பு நீடித்திருந்தது…

Hindu Goddess Gayathri

சுப்பாராவ் தான் படிக்கும் அறையின் கதவைத் தாழிட்டுக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழத்தொடங்கினார். அக்கண்ணீருக்கு முடிவே இல்லாதது போலிருந்தது. ஆறுதலளிக்கவே முடியாதவராகவும், கட்டுப்படுத்தவே முடியாதவராகவும் மாறியிருந்த திரு. சுப்பாராவ் தன்னந்தனியே அந்த அறையில் அழுது கொண்டிருந்தார். அழுது அழுது அரற்றிக் கொண்டேயிருந்தவர் திடீரென்று தானிருந்த அறையின் ஒவ்வொரு திசையையும் விநோதமாகப் பார்க்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல ஒரு பயங்கரமான வெறியும் ஆவேசமும் அவரில் தோன்றத் தொடங்கியது. தன்னைத் தானே சபித்துக் கொள்ளத் தொடங்கி, பின் கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களை நோக்கி கேள்விகளை எழுப்பத் தொடங்கினார்.
“ஏன் என்னைக் காப்பாற்ற வரமாட்டேனென்கிறீர்கள்? ஏன் எனக்கு உங்களுடைய ஆனந்தமயமான மெளனமும் நிரந்தரமும் நிறைந்த ஆன்மிக ராஜ்ஜியத்திற்கு வந்து சேர வழி காட்ட மறுக்கிறீர்கள்? யாருக்கு நான் என் தியானத்தையும் வேண்டுதல்களையும் அர்ப்பணிப்பேன்? எந்த மந்திரத்தை ஜெபித்து தியானிப்பேன்? தயவு செய்து சொல்லுங்கள்…தயவு செய்து….ஓ தெய்வமே…! நான் அவ்வளவுதான்…செத்துக் கொண்டிருக்கிறேன்… நிஜமாகவே செத்துக் கொண்டிருக்கிறேன்…”
திரு. சுப்பாராவ் அழுகையூடே கேள்விகள் எழுப்பியும் கேள்விகளுக்கூடே கேவிக் கேவி அழுது கொண்டுமிருந்தார். மெள்ள தன் மனதின், உடலின், உணர்வுகளின், ஏன், தன் ஆத்மாவின் மீதுமிருந்த கட்டுப்பாட்டையும் இழந்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ, வீட்டிலுள்ளோர் அனைவரும் பக்கத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தபடியால் திரு. சுப்பாராவ் அன்றைய தினம் வீட்டில் தனியாக இருந்தார்.
அழுகை…கேள்விகள்…தன்னைத் தானே சபித்தல்… அழுகை….சபித்தல்…கேள்வி…அழுகை…கேள்வி… சபித்தல்.. இப்படித் தொடர்ந்து கொண்டிருந்தவர் மெல்ல முடிவில்லாத…செல்பவர் மீண்டும் திரும்பி வர முடியாத இடத்தை நோக்கிச் செல்பவர் போலுமிருந்தார்…
அப்போதுதான்…. அது நடந்தது….
திடீர் ஒளியோ, இடியோசையோ, கோயில் மணி ஒலியோ எதுவும் இல்லாமல் நடந்தது. இறப்பு என்ற மாயையில்லா நிஜமானது திரு. சுப்பாராவை மிகுந்த பசியுடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரம்…அதன் இரும்புப் பிடிக்குள் ஏறக்குறைய சென்று விட்டிருந்த அவரை ஒரு கண நேரத்தில் மீண்டும் இழுத்து வந்ததைப் போல அது நடந்தது…!
இதோ…அக்கணத்தில், அந்த அறையில் இது தான் நடந்தது…
ஆனால் என்ன நடந்தது என்பதைச் சொல்வதற்கு முன்னால் உங்களனைவரையும் ஒன்றை நம்புமாறு வேண்டுகிறேன். உலகில் இது வரை நோபல் பரிசு வாங்கிய அறிவாளர்கள் எல்லாரது புத்தி கூர்மையையும் சேர்ந்தால் கூட அக்கணத்தில் அவ்வறையில் என்ன நடந்தது என்பதை ஆய்வறிய முடியாது.
இடைவிடாத அழுகை அரற்றலுக்கு மத்தியில் திரு. சுப்பாராவ் ஒன்றை கவனிக்கத் தவறியிருந்தார். தான் பூட்டியிருந்த அறையில் தன்னைச் சுற்றி இருந்த ஒரு சிறிய இடத்தில் ஒரு அசாதாரணமான தங்கமயமான மஞ்சள் நிறம் ஒன்று ஒளிரத் தொடங்கி அந்த அறையின் அந்தகாரத்தை சுத்தமாகப் போக்கி விட்டிருந்தது.
சரியாக அதே கணத்தில்…சுப்பாராவ் தன் நிலையிழந்து வீழ்ந்து கொண்டிருந்த அதே கணத்தில்…மனதை அப்படியே இழுக்கும், ஆத்மாவை அப்படியே தன்வசப்படுத்தக் கூடியதாகவும் கூடிய ஒரு பெண்ணின் குரல் கேட்டது…அந்த தெய்வீகக் குரல் பின்வருமாறு இசையொலி போலக் கூறியது…

“என் அன்பு மகனே சுப்பாராவ்….எழுந்திரு…”

அக்குரலில் ஒரு வசியப்படுத்தக்கூடிய கருணை இருந்தது. ஆனால் திரு. சுப்பாராவ் மனத்தில் அழுத்திய எண்ணங்களாலும் கேவல்களாலும் அந்த இனிய குரலைக் கேட்டாரில்லை. எனவே அக்குரல் மறுபடியும்…

“என் அன்பு மகனே சுப்பாராவ்…என்ன இது? எழுந்திரு…?

அதீதமான கருணை தொனித்த அதே சமயம் ஒரு கட்டளைத் தொனியும் தெரிந்தது அக்குரலில். அது சுப்பாராவின் கவனத்தை இப்போது கவர்ந்தது. இந்த முறை அவர் அக்குரலைத் நன்கு தெளிவாகக் கேட்டார். தன் கண்களைத் திறந்த அவர் முதலில் தன்னைச் சுற்றிலும் அந்த அறையில் இருந்த ஒளி வெள்ளத்தைக் கண்டார். ஒரு சில கணங்களுக்கு அவரால் அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதையோ அப்பெண் குரல்…இது வரை கேட்டேயிராத இனிமையுடன் கூடிய குரல் எங்கிருந்து கேட்கிறது என்பதையோ அனுமானிக்க முடியவில்லை.
அந்த அறையில் தன்னைத் தவிர யாரும் இல்லையே என்று தன் விழிகள் இரண்டும் முகத்தை விட்டுத் தெறித்து விடும் போல சுப்பாராவ் தீவிரமாக அலசினார். உண்மை தான். அவரைத் தவிர யாருமில்லை அங்கே…சுப்பாராவின் குழப்பத்தைக் கண்டு சற்றே மகிழ்ந்தவாறு அப்பெண் குரல் சொன்னது…
“அன்பு சுப்பாராவ், உன்னால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால் என் குரலை மட்டும் கேட்க முடியும். எனவே நான் சொல்வதைக் கேள். எதற்காக இவ்வளவு அழுகிறாய்? உனக்கு மறந்து விட்டதா? உனக்கு உபநயனம் ஆன போது உன் அன்புத் தந்தையார் உனக்கு காயத்ரி மந்திரம் உபதேசித்தாரே…?
“உனக்குத் தெரியாதா சுப்பாராவ்? காய்த்ரி மந்திரம் என்றாலே “காயந்தம் த்ராயதே இதி காயத்ரி” அதாவது காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்பவரை என்றென்றும் காப்பாற்றும் என்பது? உனக்குத் தெரியாதா மகனே, காயத்ரி மந்திரம் தான் ப்ரபஞ்சம் முழுமைக்கும் அதி உன்னதமான, மிக சக்தி வாய்ந்த மந்திரம் என்பதும், நான்கு வேதங்களிலும் அதற்கு இணையான வேறொரு மந்திரம் இல்லையென்பதும்…?”
இன்னமும் அந்த அறையின் எல்லா திசைகளையும் உற்று நோக்கியவாறே இருந்தார் திரு. சுப்பாராவ், அதே பயம், அதே குழப்பத்துடன்…ஆனால் முன்பை விட ஒரு சிறிய தெளிவு ஏற்பட்டிருந்தது அவருக்கு. எனவே அக்குரல் சொல்வதை நன்கு கவனிக்கலானார்…

அக்குரல் தொடர்ந்தது…

Meditation

“…சுப்பாராவ், காயத்ரி மந்திரம் மற்றனைத்து மந்திரங்களின் தாய் என்பது மட்டுமல்ல, அனைத்திலும் மிக மிகப் புனிதமானதும் கூட…எந்த ஒரு பக்தன் இம்மந்திரத்தை தினம் ஜெபிக்கிறானோ, அவனுக்குத் தன் வாழ்க்கையில் வேறு எந்த மந்திரத்தையும் எந்தப் பாதுகாப்பிற்காகவும் ஜெபிக்கத் தேவையில்லை…”
“…மிக மிக ஆற்றல் வாய்ந்த இந்த காய்த்ரி மந்திரமானது ஜெபிப்பவனை எப்போதும் இந்த ப்ரபஞ்சத்தின் எந்தவொரு கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்கும். ஜெபிப்பவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம், தான் ஈடுபடும் எந்த நல்முயற்சிக்கும் வெற்றியையும் மிக்க மன மகிழ்ச்சியையும் தரும்…”
சுப்பாராவ் அப்பெண் குரலை மிகுந்த மரியாதையுடனும் கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தார். அக்குரல் கடைசியாக மறையும் முன்…
“…சுப்பாராவ், உனக்கு காயத்ரி மந்திரம் நன்றாகத் தெரியும். இப்போதிலிருந்து ஒரு நாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஜெபிப்பதற்கும் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஜெபிப்பதற்கும் தீர்மானம் செய்து கொள். சில நாட்களில் உன் மனதில் குடியிருக்கும் பயம் அனைத்தும் போய் விடும். உன் கஷ்டங்கள் யாவும் தீர்ந்து விடும். எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுதும் நீ ஆனந்தம், அமைதி, பொன் செய்வதாம் போதுமென்ற மனது, அனைத்தும் பெற்று சுகமாக வாழ்வாய்…!”
அப்பெண் குரல் இவையனைத்தையும் கூறி விட்டு அந்த அறையிலிருந்து சட்டென்று மறைந்து போனது…!
நடந்த இனிய அதிர்ச்சியிலிருந்து முழுதாக வெளி வர சுப்பாராவிற்கு சிறிது நேரம் பிடித்தது. ஆனால் அந்தப் பெண் குரலுக்குரிய தெய்வம் யார் என்ற கேள்வியில் அவர் நேரத்தை வீணடிக்கவில்லை. மாறாக, மிகுந்த தெளிவும் புத்துணர்ச்சியும் அடைந்த அவர் உடனடியாக காயத்ரி மந்திரத்தை ஒரு நாளில் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ அவ்வளவு ஜெபிக்கத் தொடங்கினார்.
முதலில், ஒரு நாளைக்கு ஆயிரம் முறை என தொடங்கியவர் மெல்ல ஒரு நாளைக்குப் பத்தாயிரம் முறை ஜெபித்தார். மெல்ல மெல்ல உலகியல் வாழ்க்கையிலிருந்து தன்னை விடுபடுத்திக் கொள்ளவும் தொடங்கினார். கற்பிக்கும் தன் தொழில் தவிர மீதி சமயங்களில் எல்லாம் காயத்ரி மஹா மந்திரத்தை ஜெபித்த வண்ணமாயிருந்தார்.
இவ்வாறு மெல்ல சுப்பாராவ் அவர்கள் 25 லக்ஷம் முறை எட்டி, பின் மெல்ல 50 லக்ஷம் முறை ஜெபித்தவரானார். சரியாக அவர் தன் ஐம்பது லக்ஷக் கணக்கை எட்டிய சமயத்தில் அவர்தம் மகள் அபர்ணாவிற்கு ஒரு நல்ல வரன் கூடி வந்தது. இந்த சம்பந்தம் ஆச்சர்யகரமாக காக்கிநாடாவிலிருந்த ஒரு பிரபலமான டாக்டர் திரு. கொல்லுரு அவதார ஷர்மா அவர்கள் குடும்பத்திலிருந்து வந்தது. ஆச்சர்யம் என்னவென்றால் டாக்டர் ஷர்மா அவர்களும் காயத்ரி தேவியின் நல்ல பக்தர், நாளொன்றில் பல முறை காயத்ரி ஜெபிப்பவர்..
அதனிலும் ஆச்சர்யம் என்னவெனில்..டாக்டர் ஷர்மாவின் புதல்வன், அந்த வரனின் முழுப் பெயர் – காயத்ரி வர ப்ரசாத். சுப்பாராவின் மிக்க ஆனந்தமடைந்தார், காயத்ரி மாதாவின் பெயரே தன் வருங்கால மருமகனின் பெயருமாய் இருத்தல் அவருக்கு காயத்ரி தேவியே இந்த வரனை அனுக்ரஹித்ததாய் தோன்றியது.
தன் ஒரே மகள் அபர்ணாவின் விவாஹத்தை காயத்ரி வர ப்ரசாத்துடன் நன்கு நடத்தி முடித்த சுப்பாராவ் அவர்களுக்கு காயத்ரி மந்திரம் தொடர்ந்து ஜெபிக்க மேலும் சிறிது நேரம் கிடைத்தது…

அந்த ஒரு நாள் வரை….

Please Click Here to read the English version of this part of the story

Love

Ramesh Krishnamurthy

tirurameshkrishna@gmail.com

https://www.facebook.com/RameshKrishhna

Original Story In English By

Narrenaditya Komaragiri

narrenaditya@tirumalesa.com

www.facebook.com/narrenaditya

Please Click Here to know more about this author

Facebook Comments