Hindu Goddess Gayatri

வக்ர துண்ட மஹா காய….சூர்ய கோடி ஸமப்ரப…நிர் விக்நம் குரு மே தேவ…ஸர்வ கார்யேஷு ஸர்வதா!..

“ஸார், நமஸ்காரம். என் பெயர் நேமனி சுப்பாராவ். விசாகப்பட்டினத்தில் ஒரு ட்யூஷன் மாஸ்டராக இருக்கிறேன்.  தங்களை வந்து சந்திக்குமாறு அவள் என்னிடத்தில் சொன்னதால் வந்திருக்கிறேன்.”

“அது யார் அவள்?”

“வேத மாதா காயத்ரி தேவி…!”

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றிலேயே மிகப் பிரபலரானநிர்வாக அதிகாரியும் (Executive Officer),தன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் நிதி நிலைமையையும் பொருளாதாரக் கொள்கையையும் சீர்திருத்தி அதன் மூலம் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் தோற்றத்தையே மாற்றிக் காட்டிய முன்னாள் பிரதமர் திரு. பி.வி. நரஸிம்ஹ ராவ் அவர்களின் தகவல் ஆலோசகராகவும்(Information Adviser) இருந்தவர் பி.வி.ஆர்.கே. ப்ரசாத்.

அவர் அன்றைய சாயங்காலத்தில்துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில்முன் எப்போதும் அனுபவித்திராத விநோதத்துடன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார்.  தன் முன்னே அமர்ந்திருக்கும் நடுத்தர வயதுள்ள, அமைதியான தோற்றமுடைய ஒரு பிராமணர்…என்ன சொல்கிறார் இவர்?

அதிர்ச்சியூட்டும், ஆச்சர்யமூட்டும், ஆன்மிக உலகில் இதுவரை கேட்டிராத, முதுகெலும்பில் சில்லிப்பூட்டும் அந்த உரையாடல் பி.வி.ஆர்.கே ப்ரசாத்திற்கும் அந்த மத்திம வயது அந்தணருக்கும் இடையே 2004 ஆம் ஆண்டு, விசாகப்பட்டினத் துறைமுகத்திலிருக்கும் ஒரு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. ப்ரசாத் அவர்கள் திருமலை திருப்பதியில் இருந்த ஒரு 550 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு ஆயிரங்கால் மண்டபம் (வெய்யி கல்ல மண்டபம்) இடிபட்ட விவகாரத்தில், ஒரு விசாரணை நடத்துவதற்காக  விசாகப்பட்டினம் வந்திருந்தார். தன் காதில் விழுந்ததை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதிர்ச்சியிலும் அவர் அந்த அந்தணரிடம் மீண்டும்…

“என்ன….?! என்ன சொன்னீர்கள்?!”

“ஆமாம் ஸார். காயத்ரி தேவி என்னிடம் தங்களை சந்திக்குமாறு சொன்னாள். அவள் என்னிடம் அவ்வவ்போது பேசுவதுண்டு, தேவைப்படும் பொழுது வழிகாட்டுவதுமுண்டு. உண்மையில் ஸார்… தங்களுடைய பெயரைசில தினங்களுக்கு முன்அவள் சொல்லும் வரையில் உங்கள் பெயரோ நீங்கள் யாரென்பதோ எனக்குத் தெரியவே தெரியாது. அவளே தங்களைச் சந்திக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள்!”

கண்ணாடிகளுக்குப் பின் பாதி மூடிய விழிகளுடன், மிக மெளனமாக ப்ரசாத் அவ்வந்தணர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்…

Symbol Of Om

“ஆனால் ஸார்…தன் கட்டளைக்குப் பின் ஏதோ ஒரு பெரிய தெய்வீகக்  காரணம் இருப்பதாக அவள் சொன்னாள். எனக்குத் தங்களை யாரென்று தெரியாததால் விசாகப்பட்டினத்திலிருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் தங்களைப் பற்றி சில விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஐ.ஏ.எஸ் ஆஃபிஸர் என்றும் விசாகப்பட்டினத் துறைமுகத்தின் சேர்மனாக 1988 முதல் 92 வரை பதவியாற்றியதாகவும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள்.” – என்றார் சுப்பாராவ்.

மிகப் ப்ராபல்யமான பி.வி.ஆர்.கே ப்ரசாத் முதலில் அதிர்ச்சியிலிருந்தார். பின் குழப்பமடைந்தார்… கடைசியில் எரிச்சலடைந்தார். தன்னிடம் ஏதோ நன்கொடை வாங்குவதற்காக இந்த அந்தணர் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் போலும். இதே வேறு யாராவதாக இருந்திருந்தால் தன் காரியதரிசியைக் கூப்பிட்டு அந்த மனிதரை உடனே வெளியேற்றச் செய்திருப்பார். ஆனால் இந்த அந்தணரைத்தன் மிக நெருங்கிய நண்பர் பாஸ்கர மூர்த்தி அல்லவா அழைத்து வந்திருக்கிறார்? எனவே தன் நண்பர் தன்னிடம் இந்த அந்தணருக்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டபோது மறுக்க முடியவில்லை.

அதன் காரணமாகவே அன்றைய மாலைப் பொழுதில் நேமனி  சுப்பாராவ் சொல்வதை ப்ரசாத், பாஸ்கர மூர்த்தி மற்றும் சிலர் ப்ரசாத்தின் விருந்தினர் அறையில் கேட்டுக் கொண்டிருந்தனர். மேலும், தன் நண்பனை பொருட்டே ப்ரசாத் இந்த மனிதர் சொல்வதை, அத்தகைய அதிர்ச்சியூட்டும் அறிமுகப் படலத்திற்குப் பின்னரும், மெளனமாய் இன்னும் சிறிது கேட்கலாம் என்று முடிவு செய்தார். அவரின் அத்தகைய மெளனமான செவிமடுத்தலே பின்னர் சனாதன தர்மமாம் ஹிந்துமத ஆன்மிக வரலாற்றில் ஒரு பெரிய அத்தியாயம்உருவாகக் காரணமாயிற்று.

சுப்பாராவின் பதிலைத் தொடர்ந்து ப்ரசாத் அந்த அந்தணர் முகத்தையே சில விநாடிகள் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு சலனமும் தென்படவில்லை,  இவ்வளவு பெரிய ஐ.ஏ.எஸ் ஆபிஸருக்கு முன்னால் தாம் அமர்ந்திருக்கிறோம் என்ற ஒரு சிறிய தர்மசங்கடம் கண்களில் தென்பட்டது, அவ்வளவே. மாறாக, தேஜஸுடன் இருந்த அந்த முகத்தில் ஒரு அசாதாரணமான பயமின்மை தெரிந்தது. திரு. ப்ரசாத் நன்கறிவார்…ஒரு சிலரே, இறையருள் பெற்ற வெகு சிலருக்கே அத்தகைய தேஜஸ் உண்டு முகத்தில்…

முகத்தில் தென்பட்ட தேஜஸ், பயமின்மை இவையனைத்திற்கும் மேலாக ப்ரசாத்தை மகிழ்வுடன் ஈடுபடச் செய்தது அவ்வந்தணரின் இதழ்களில் மெலிதாக ஆனால் நிரந்தரமாகத் தவழ்ந்து கொண்டிருந்த புன்னகை, ப்ரசாத்தின் அறைக்கு எப்போது நுழைந்தாரோ அப்போதிலிருந்து அதே புன்னகை. உலகத்தில் தனக்குப் புன்னகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தேவையில்லை என்பதைப் போன்ற ஒரு புன்னகை.

“ஆன்மிகத்தில் உயரே பறந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களால் மட்டுமே இப்படி முழுமனதுடன் புன்னகைக்க முடியும்”

ஆத்ம சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்த பலரை சந்தித்திருந்த ப்ரசாத் அவர்களின் ஆழமான அனுபவங்கள் மனத்தில் மிக லேசாக தொக்கிக் கொண்டிருந்த அந்த சந்தேகத்தையும் விலக்கியது. அவர் முற்றிலும் தெளிவடைந்தார்…”இவர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்கிறது.”

அவர் அந்த அந்தணரிடம் “அனைத்தையும் மிக விவரமாகக் கூறும்படி” கேட்டுக் கொண்டார்.

பின்வரும் விவரங்களை ப்ரசாத் மற்றும் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து போகுமாறு அவ்வந்தணர் கூறத்தொடங்கினார்.

அவர் பெயர் நேமனி சுப்பாராவ். ஆன்மிக நாட்டமும் அதற்கேற்ற வாழ்க்கை முறையும் கொண்டிருந்த ஒரு தம்பதியினருக்குப் பிறந்தவர். இத்தம்பதியர் பக்தியை சாரமாகக் கொண்ட, மிக பாண்டித்தியம் மிக்க, இறைத் தொண்டில் வெகுவாக ஈடுபட்டிருந்த பரம்பரையில் வந்தவர்கள். தங்களின் ஆன்மிக வாழ்வால் “பக்திமான்கள் பரம்பரை” என்று சொல்லுமளவிற்கு இறையடியார்கள்.

Light On Vedas

வழி வழியாகவே சுப்பாராவின் பாட்டனார், முப்பாட்டனார் முதலானோர் ஆசார, ஒழுக்க சீலர்களாகவும் இறைவனிடத்தில் நீங்காத பற்றுடையவர்களாகவும் இருந்தவர்கள். கடுமையான தவங்களை மேற்கொண்டு தங்களின் இஷ்ட தெய்வங்களைத் தொழுது வந்தவர்கள். சுப்பாராவின் பெற்றோர்கள் மற்றும் அவர்தம் ஐந்து பிள்ளைகளுமே, தங்களின் குடும்ப்ப் பொருளாதார நிலமை ஏழ்மைக்குரியதாய் இருப்பினும், பக்தி எனும் செல்வம் மிகக் கொழித்தவர்களாக, அமைதியான துறைமுக நகரமாம் விசாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தனர்.

சுப்பாராவின் தந்தையார் மிக நன்றாக பாடக்கூடியவர். அந்நகரத்தில் நடைபெற்ற பல ஆன்மிக சத்சங்கங்களிலும் விழாக்களிலும் பாடுபவராய் இருந்தார். அவர்தம் ரசிகர்கள் அவருடைய நிகழ்ச்சியை “நேமனி ஜகந்நாத ராவ் பஜன்” என்று அன்புடன் குறிப்பிடுவார்கள். சுப்பாராவின் தாயாரும் சளைத்தவரல்ல, தன் குடும்பம் சந்தித்த பல சோதனைகளுக்கு மத்தியிலும் தன் அன்புக் கணவருக்கு சகல விதத்திலும் தோள் கொடுப்பவராய் இருந்தார்.

இத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சுப்பாராவும் வகுப்பில் முதல் மாணவராயும், ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) மூலம் புகழ்பெற்ற ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் (எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்) பிரிவில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கிடைத்த பல நல்ல வேலைகளையும் தன் வயதான தாய் தந்தையாரையும் சகோதர சகோதரிகளையும் பிரிய மனமில்லாமல்  ஏற்றுக் கொள்ளாதிருந்தார்.

என்னதான் தனக்குக் கிடைத்த வேலைகளையும் ஏற்க முடியாத்தால் சற்று மனம் தளர்ந்தவராய் இருப்பினும் சுப்பாராவ் தன் பரம்பரையின் மேன்மைக்கு தக்கன வாழ்வின் கடினங்களை தன் இதழ்களில் எப்போதும் தவழும் புன்னகையுடனேயே ஏற்று வாழ்ந்து வந்தார்.

அதன் பிறகு எதற்காகவும்….அந்த ஒரு நிகழ்வைத் தவிர…சுப்பாராவ் புன்னகைப்பதை நிறுத்தவில்லை…

ஷிப்யார்ட் காலனிக்கு அருகாமையிலிருக்கும் மாணவர்களுக்கு கணக்குப் பாடத்தில் டியூஷன் எடுத்து வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்ட சுப்பாராவ், பின்னர் அதையே தன் வருமானத்தின் ஒரே ஆதாரமாகவும் ஆக்கிக் கொண்டார். ஆறு மாதத்திற்குப் பின் இன்னொரு காலனிக்கு சற்றே பெரிய விட்டிற்கு ஜாகை மாறினார். பின்னர் விசாகப்பட்டினத்திலேயே ‘மிக நல்ல டியூஷன் மாஸ்டர்’ என்ற புகழாரமும் சேர்ந்து கொண்டது.

காலம் ஒட, வயதான சுப்பாராவின் பெற்றோர்கள் குடும்பப் பொறுப்பை சுப்பாராவிடம் விட்டு இறைவனடி சேர்ந்தனர்.பெற்றவர்களிடம் அளவிட முடியாத மரியாதையும் அன்பும் கொண்ட சுப்பாராவ் தன் சகோதர சகோதரிகளைப் பராமரித்து, வளர்த்து ஆளாக்கும் பெரிய பொறுப்பை ஏற்றதோடு, அவர்களின் திருமணங்களையும் சில கஷ்டத்திற்கு மத்தியிலும் நன்கு நடத்தி வைத்தார்.

டியூஷன் மாஸ்டராய் இருந்து வரும் சொற்ப சம்பளத்திலும் தன் கணவனது முகம் கோணாது, அவர்தம் கூடப் பிறந்தவர்களைப் பார்த்து கொள்வதிலும், இன்னபிற கடமைகளிலும் வேங்கட லக்ஷ்மி, சுப்பாராவின் மனைவி எனும் ஸ்தானத்தில் வெகு ஆதரவாய் இருந்து வந்தார். அவருக்கும், உங்களில் பலருக்கும் தெரிந்தது போல…ஆசிரியர் தொழில் என்பது உலகிலேயே மிகப் புனிதமான ஒன்று, ஆனால் நன்றியறியாத ஒன்று என்று தெரிந்திருந்தது.

இவ்வாறாக சுப்பாராவின் வாழ்க்கைஒரு வித மாற்றமும், எதிர்பாரா திருப்பங்கள் எதுவுமின்றி சீராகச் சென்று கொண்டிருந்தது. ஒரு வழியாக பலவித கஷ்டங்களுக்குப் பின் தன் வாழ்வின் பல இன்னல்களிலிருந்தும் விடுபட்டு, பொருளாதார ரீதியிலும் சிறிது முன்னேற முடிந்தது.

இனி…அமைதி…சற்றே மூச்சை நன்கு உள்ளிழுங்கள்….நான் சொல்ல வருவதை கவனமாகப் பாருங்கள்…

நீங்கள் இச்சமயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். எனக்குப் புரிகிறது…சுப்பாராவைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இவ்வளவுதானா? காயத்ரி தேவி என்ன சொன்னாள்? உங்கள் கேள்விகள் சரியானவையே. கதை இனிமேல் தான் தொடங்கப் போகிறது…எப்படி?

இதே தருணத்தில் தான், 1980 இல், தெய்வீக சக்திகள் ஒன்றிணைந்து ஒரு சாதாரண டியூஷன் மாஸ்டரின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொணர திருவுளம் கொண்டு, நிகழ்வுகளை கட்டமைக்கத் தொடங்கியது. இத்திருவிளையாடல்கள் பின்னர் ‘மிக நல்ல டியூஷன் மாஸ்டர் சுப்பாராவை’ யோகி நேமனி சுப்பாராவாக மாற்றியது.

Meditation

Please Click Here to read 

Please Click Here if you want to read the original English version of this part of the story

Love

Ramesh Krishnamurthy

tirurameshkrishna@gmail.com

https://www.facebook.com/RameshKrishhna

 

Original Story In English By

Narrenaditya Komaragiri

narrenaditya@tirumalesa.com

www.facebook.com/narrenaditya

Please Click Here to know more about this author

Facebook Comments

comments